09/08/2025
பொகவந்தலாவ டியன்சின் பாடசாலையின் தொல்பொருள் கண்காட்சி - ஓர் பார்வை
வரலாற்று அனுபவங்களை பெற்றுத்தரும் வகையில் அமையப்பெற்ற பொகவந்தலாவை டியன்சின் பாடசாலையின் தொல்பொருளியல்சார் கண்காட்சி தொடர்பாகவே இப்பதிவு இடம்பெறுகின்றது. மாணவர்களின் அறிவு, திறன், மனப்பாங்குகளை வளர்க்கும் வகையில் கல்வி திட்டமிடல் அமையப்பெற வேண்டும் என்பது அனைவரினதும் எதிர்பார்ப்பாக அமைகின்ற இக்காலத்தில், பொகவந்தலாவை டியன்சின் பாடசாலையில் இன்று (07.08.2025) ஆரம்பமாகி நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறகின்ற இலங்கையின் வரலாற்று பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் தொல்பொருளியல்சார் கண்காட்சி நேரடி அனுபவங்களின் ஊடாக மாணவர்களுக்கான கல்வியை வழங்குகின்ற ஓர் அருமையான நிகழ்வாகும்.
அந்தவகையில் இன்றைய தினம் டியன்சின் பாடசாலைக்கு சென்று இத் தொல்பொருளியல் கண்காட்சியை பார்வையிட்ட வேளை காணக்கிடைத்த அம்சங்கள் பின்வருமாறு,
1. மனிதனின் வரலாற்று பரிணாமத்தை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்படங்களை சுமந்த பதாதைகள் (வரலாற்று காலம், முன் வரலாற்றுக் காலம், வரலாற்று காலம்)
2. பண்டைய இலங்கையில் பயன்படுத்தப்பட்ட புராதான நாணயங்கள், அவற்றின் பல்வகைமையை வெளிப்படுத்தும் “நாணய விஞ்ஞானத்தை” சாற்றுரைக்கும் புகைப்படங்கள்
3. வரலாற்றுக்கு முற்பட்ட மனிதனை வெளிப்படுத்தும் மாதிரி உருவச்சிலை
4. பொலன்நறுவை மற்றும் அனுராதபுர இராசதானிகள் காலத்தில் காணப்பட்ட காவற்கற்கள் (மூன்று வகையான காவற்கற்கள்)
5. பொலன்நறுவை மற்றும் அனுராதபுர இராசதானிகள் காலத்தில் காணப்பட்ட சந்திரவட்டக்கற்கள்
6. எமது முன்னோர்களின் விஞ்ஞான தொழிநுட்ப அறிவை வெளிப்படுத்தும் வகையிலான புராதன மலசல கூடத்தின் அமைப்பு
7. புராதன மக்களின் வைத்தியத்துறை நிபுணத்துவத்தினை வெளிப்படுத்தும் வகையிலான பொலன்நறுவை ஆலாஹன பிரிவெனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மருத்துவ ஓடம்
8. பொலன்நறுவையில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சோழர்கால நடராஜர் சிலை
9. பொலநறுவை மற்றும் அனுராதபுர இராசதானிகளுக்குரித்தான புத்தர் சிலைகள்
10. வரலாற்று தகவல்களை வெளிப்படுத்தும் வகையிலான வீடியோ முன்வைப்புகள்
11. மலையக மக்களின் வாழ்வியல் துன்பத்தை வெளிப்படுத்தும் வகையிலான குடியுரிமை பறிப்பும், இலங்கை இந்திய ஒப்பந்தங்கள், இந்திய வம்சாவளி தமிழர்கள் நாடுகடத்தப்பட்ட முறை, நாடற்றவர்களின் அவலம் என்பவற்றை வெளிப்படுத்தும் வகையிலான வீதி நாடகம்
என முழு பாடசாலை வளாகமும் இன்றைய தினம் எமது வரலாற்றினை பறைசாற்றி நின்றமை மகிழ்ச்சியளிக்கின்றது.
அதிபரின் தலைமைத்துவமும், ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பும்......!
இத் தொல்பொருளியல் கண்காட்சி முறையாக முன்னெடுக்கப்படுவதற்கு பாடசாலையின் அதிபர் திரு. பொன். பிரபாகரன் அவர்களின் தலைமைத்துவமும் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் அர்ப்பணிப்புமே காரணமாகியது. பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பாடசாலை சமூகத்தை ஓரணியில் திரட்டி கண்காட்சியை நடாத்துவது முழு பாடசாலை சமூகத்தின் வெற்றியே. குறிப்பாக கண்காட்சியை நடாத்துவதற்கான ஏற்பாடுகள் முழுமையாக இடம்பெற்றுள்ளது. பாடசாலை ஆசிரியர்கள் பாடசாலையின் மாணவர்களையும், வெளிப்பாடசாலைகளிலிருந்து வருகின்ற மாணவர்களையும், ஆசிரியர்களையும் அன்பாக வரவேற்பதும், பராமரிப்பதும் பாராட்டுக்குறியதே.
மாணவர்களின் ஆளுமைகள்…..!
குறித்த கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள வரலாற்று தொல்பொருட்கள் தொடர்பில் தெளிவுபடுத்துகின்ற மாணவர்களின் பேச்சுத்திறன் விடயத்தெளிவு, முன்வருகை, என்பன காண்போரை வியக்கவைத்தது.
வெளிப்பாடசாலைகளிலிருந்து வருகைத்தரும் ஆசிரியர்களுக்கான உபசாரம்……..!
கண்காட்சியை பார்வையிட மாணவர்களை அழைத்துவரும் வெளிப்பாடசாலை ஆசிரியர்களை பாடசாலையின் அதிபரும், ஏனைய ஆசிரியர்களும் மனமகிழ்வோடு இன்முகம் காட்டி தேனீர் மற்றும் சிற்றுண்டிகளை வழங்கி உபசரித்து அனுப்பி வைத்தது டியன்சின் பாடசாலையின் வந்தோரை போற்றும் தனித்துவத்தினை வெளிப்படுத்தியது.
வீதி நடகம் வியப்பூட்டியது……!
தொல்பொருளியல் கண்காட்சியை நடாத்திகொண்டிருக்கும் போது எம் மலையக மக்களின் பிரஜா உரிமை பறிப்பு, இந்திய வம்சாவழி தமிழ் மக்களை நாடு கடத்துவதற்கான ஒப்பந்தங்கள், இவ்வொப்பந்தத்தில் கைவிடப்பட்ட நாடற்ற மக்களின் அவலம் என்பவற்றை உணர்ச்சி பொங்க டியன்சின் பாடசாலை மாணவர்கள் வீதி நாடகமாக பாhத்திரமேற்று நடித்து காண்போரை வியப்பூட்டியமை இக்கண்காட்சியின் மகத்தான வெற்றியாகும். குறிப்பாக இன்றைய நாள் முடிவில் இந் நாடகம் 6 முறை பாடசாலை வளாகத்தில் வருகின்ற பார்வையாளர்களுக்காக நாடக குழுவினரால் நடித்துக் காட்டப்பட்டது. எத்தனை முறை நாடகம் நடிக்கப்பட்டாலும் பாத்திரமேற்று நடித்த மாணவர்கள் மத்தியில் எந்தவொரு சோர்வும் இல்லாமல் இருந்தது எங்களுக்கு வியப்பினை தந்தது. சிறப்பானதொரு நாடக குழுவினை வளர்த்து வரும் டியன்சின் பாடசாலை சமூகத்திற்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள்.
இக்கண்காட்சியின் விளைவு…………!
பொகவந்தலாவ டியன்சின் பாடசாலையில் இடம்பெற்றுவரும் இத் தொல்பொருளியல் கண்காட்சி பாடசாலை மாணவர்களுக்கு வரலாற்று பாடத்தில் பெற்றுக்கொள்ள வேண்டிய நேரடி கற்றல் அனுபவங்களை தருகின்றது. குறிப்பாக எமது பண்டைய இலங்கையரின் கலை கலாசார பண்பாட்டு பாரம்பரியங்கள், விஞ்ஞான தொழிநுட்ப வளர்ச்சி என்பவற்றை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பினை வழங்குகின்றது.
கடந்த காலத்திலும் டியன்சின் பாடசாலையில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஆய்வு திறனை வெளிப்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் ஆய்வு மாநாடுகளும் நடாத்தப்பட்டன. இவ் ஆய்வு மாநாட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் தமது ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்ததை இவ்விடத்தில் நினைவுகூற விரும்புகின்றேன. இவ்வாறு பல சவால்களுக்கு மத்தியிலும் ஏனைய பாடசாலைகளுக்கு முன்மாதிரியாக இத்தகைய ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொண்டு வரும் பாடசாலையின் அதிபருக்கும், பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் எமது மலையக சமூகத்தின் சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகும். உங்கள் முயற்சிகள் தொடரட்டும் ….