26/02/2026
தினமும் உடற்பயிற்சி
உடல் ஆரோக்கியமாக இருக்க உதவும் முக்கியமான விஷயங்களைப் பட்டியலிடுங்கள் என்றால் அந்தப் பட்டியலின் முதன்மையான இடத்தில் உடற்பயிற்சி என்பது இருக்கும். உடற்பயிற்சியின் அவசியம் பற்றி காலம்காலமாக நாம் பேசி வந்தாலும் அதன் உண்மையான முக்கியத்துவத்தையும், அவசியத்தையும் முழுமையாக யாரும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. அப்படி உணர்ந்திருந்தால், இதய நோயாளிகளின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகரித்திருக்காது.
பல நோய்களில் இருந்து நம்மைக் காக்கும் பாதுகாப்பு அரண்களாக உடற்பயிற்சிகள் அமைகின்றன. இதய நோய்களால் பாதிக்கப்படாமல் தப்பிப்பதற்கும் உடற்பயிற்சிகள் எத்தகைய நன்மைகளை அளிக்கின்றன என்பதை விரிவாகப் பார்க்கலாம்.
இதயம் வலுவான தசைகளால் ஆன விசை அமைப்பு என்பதை நீங்கள் அறிவீர்கள். இதயம் நன்கு செயல்பட வேண்டும் என்றால், ஒவ்வொரு செல்லுக்கும் தேவையான ரத்தம் கிடைக்க வேண்டும். அப்போதுதான் தசைகள் வலுவாக இருந்து இதயத்தை நன்றாக இயங்க வைக்க முடியும். இதயத்தில் உள்ள தசைகளை வலுவாக்க ஒருவரின் வயது உடல் அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப உடற்பயிற்சிறைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தினமும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி அந்த உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
உடற்பயிற்சியின் பயன்கள்.
இதயத்தில் இருந்து ரத்தம், ரத்தக் குழாய்களின் மூலமாக நமது உடலில் உள்ள உறுப்புகளுக்குப் போய்ச் சேர்கிறது. எதிர்பாராத காரணங்களால் அதாவது, ரத்தக் குழாய்களில் தடை இருந்தாலோ அல்லது அவை பாதிக்கப்பட்டிருந்தாலோ ரத்தம் சரிவர உறுப்புகளுக்குப் போய்ச் சேராது. இந்த இக்கட்டான நிலையை ஈடுகட்டும் வகையில் முக்கிய உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் தடைபடாமல் இருக்க மாற்று ரத்தக் குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ரத்தக் குழாய்களை இணை ரத்தக்குழாய்கள் (Collateral Circulation) என்று சொல்வார்கள்.
அதெல்லாம் சரிதான். உடற்பயிற்சிக்கும் இந்த இணை ரத்தக் குழாய்களுக்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா? இருக்கிறது.
இந்த இணை ரத்தக் குழாய்கள் இதயம் உருவாகும்போதே உருவாகிவிடுகின்றன. ஆனால் முக்கியமான வேலைகளை முதன்மை ரத்தக் குழாய்களே முழுநேரமும் செய்துவிடுவதால் இணை ரத்தக் குழாய்கள் செயலற்றுத்தான் காணப்படும். அவசர காலத்தில் தானே நமது சேவை தேவை என்ற அலட்சியத்தில் இவை அளவில் சுருங்கியும், வளைந்தும், நெளிந்தும் காணப்படும். அந்த நிலையில் திடீரென முதன்மை ரத்தக் குழாய்கள் செயலற்றுப் போகும்போது இவை விழிப்படைந்து வேலை செய்ய சற்று நேரம் பிடிக்கும்.
ஆனால் இளமைப் பருவத்தில் இருந்து நாம் அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இந்தத இணை ரத்தக் குழாய்களை நன்கு இயக்கி அவற்றை எப்போதுமே தயார் நிலையில் வைத்திருக்கலாம். அதன் மூலமாக திடீரென இதயத்தின் முதன்மை ரத்தக் குழாய்கள் அடைபடும்போது, இந்த இணை ரத்தக்குழாய்கள் விரைவாகச் செயல்பட்டு, மாரடைப்பு போன்ற சிக்கலான பிரச்சனைகளால் மரண ஆபத்து ஏற்படாமல் தவிர்க்க முடியும்.
நீங்கள் தொடர்ச்சியாகத் தினமும் உடற்பயிற்சி செய்து வருவதன் மூலம் மாரடைப்புக்கான வாய்ப்பையும் பெருமளவு குறைத்துவிடலாம். மாரடைப்புக்கு அடிப்படை காரணம் இதயத்தசைகள் சுருங்கி, இதயம் இயங்கத் தேவையான உயிர்வளி சத்துகள் போன்றவை கிடைக்காததுதான். அன்றாட உடற்பயிற்சிகள், இதயத் தசைகளின் சுருங்கும் ஆற்றலை அதிகமாக்குகின்றன. அதோடு உடற்பயிற்சி செய்யும் போது அதிக அழுத்தத்துடன் ரத்தம் ரத்தக் குழாய்கள் வழியே செல்கிறது.
இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை அதிக அழுத்தத்துடன் வரும் ரத்தமானது ஓரளவுக்கு அகற்றுகிறது. இதன் மூலமாக மாரடைப்புக்கான வாய்ப்பு குறைக்கப்படுகிறது. அன்றாட உடற்பயிற்சியின் மூலமாக இதய நோய்களையும், மாரடைப்பையும் கணிசமான அளவு தடுக்க முடியும்.
உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும் சரிவர இயங்க வேண்டும் என்றால் தேவையான உயிர்வளி, சத்துகள் போன்றவை தொடர்ந்து கிடைக்க வேண்டும். ரத்தத்தின் மூலமாகவே இவை செல்களைப் போய்ச் சேருகின்றன. அன்றாடம் குறிப்பிட்ட கால அளவில் மேற்கொள்ளப்படும் உடற்பயிற்சிகள் இதயத்தின் செயல்திறனை அதிகமாக்குவதோடு, உடலில் உள்ள பல்வேறு ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்கின்றன. மேலும் ரத்தக் குழாய்களில் ரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடவும் துணைபுரிகின்றன.