27/02/2024
நம் சுவாமி யோகி ராம்சுரத்குமாரிடம் நெருங்கிப் பழகியவர்கள் அவரிடம் ஒருவித தெய்வீகப் பெண்மையின் அரும் பெரும் லட்சணம் இணைந்திருப்பதை உணர்ந்திருப்பார்கள்.
உள்ளிருந்து பொங்கிப் பெருகி வழியும் அன்பால் தரணியில் வாழும் அனைவருக்கும் தாயாகி இருப்பதை அவர்கள் அறிவார்கள்.
இதன் காரணமாகவே பெண் பக்தர்கள் அனைவரும் தங்களின் சகல விதமான பிரச்சனைகளையும் சற்றும் தயக்கமின்றி சுவாமியிடம் பேச முடிந்தது.
சுவாமியும் அனைத்து வயதுப் பெண்களின் பிரச்சனைகளையும் புரிந்து கொண்டு அதற்கான தீர்வையும் அவரவர் நிலைக்கேற்ப உபதேசிப்பார்.
அவரவர் வீட்டில், சுவாமி, பெண்களை பக்தி பூர்வமாக, உறுதியாக நிலைநிறுத்தி வீட்டில் அமைதியும், ஆனந்தமும் தாண்டவமாடச் செய்திடுவார்.
பெண்கள், மகிழ்ச்சியோடும், நிறைவோடும் வாழும் இல்லங்களே சுவாமி வாழும் இல்லங்கள் ஆகும்.
பெண்களின் பாதுகாப்பு சுவாமியின் பிரதானமான குறிக்கோளாகும். தனித்து பெண்கள் பயணிக்க அவர் ஒருபோதும் ஒப்பியதில்லை.
ஒரு சமயம் சுவாமியின் அத்யந்த பக்தரின் தாய் தன் சகவயது தோழிகள் இருவருடன் சுவாமியைத் தரிசிக்க பேருந்தில் திருவண்ணாமலை வந்தார். அவரின் வயது அப்போது சுமார் 65 இருக்கும்.
பெரிய செல்வந்தராயினும் மிக எளிமையாக வாழ்ந்து கொண்டிருந்த
உன்னதமான தாய் அவர். சுவாமியைக் குருவெனக் கொண்டவர். சுவாமியின் சந்நிதியில் அமர்ந்திருந்து சுவாமியின் அருளுரையைக் கேட்கும் விருப்புடையவர்.
இரண்டு நாட்கள் கடந்தன. அம்மை ஊர் திரும்பும் நாள் வந்தது. சுவாமியிடம் விடை பெற்று புறப்பட சந்நிதி தெரு வீட்டிற்கு அம்மை வந்தார்கள்.
நான் என் உறவினரோடு சுவாமியின் எதிரில் அமர்ந்திருந்தேன்.
"சுவாமி நாங்கள் ஊருக்கு புறப்படுகிறோம்." அம்மை சுவாமியிடம் கூறினார்.
"எப்படி போகப்போகிறீர்கள் அம்மா"
"பஸ்ஸில்தான் சுவாமி."
சுவாமி என்னைப் பார்த்தார்.
"நீ காரில்தானே வந்திருக்கின்றாய்?"
"ஆமாம் சுவாமி."
"இவர்களை நீ அழைத்துக்கொண்டு அவர்கள் ஊரில் விட்டுவிடுவாயா?"
"ஆகட்டும் சுவாமி."
ஆனால் அம்மையார் ஒப்புக் கொள்ளவில்லை. சுவாமி கெஞ்சினார்.
"பார்த்தசாரதி நல்ல டிரைவர் அம்மா. உங்களை பத்திரமாக வீட்டில் விட்டுவிடுவார் அம்மா."
"நீங்கள்தான் எங்கள் டிரைவர் சுவாமி. எங்களை பத்திரமாக பிரம்மத்தில் சேர்த்துவிடுவீர்கள். அதனால் கவலை வேண்டாம் சுவாமி. நாங்கள் பஸ்ஸிலேயே செல்கிறோம்."
"நீங்கள் அப்படி நம்புகின்றீர்கள் என்றால், பார்த்தசாரதி இந்த பிச்சைக்காரனின் கருவி எனக் கருதுங்கள் அம்மா. தயை கூர்ந்து பார்த்தசாரதியுடன் காரில் செல்லுங்கள் அம்மா."
அம்மை வாதம் செய்யாமல் ஒப்புக்கொண்டார்.
நானும், உறவினரும் அவர்களை அவர்கள் ஊரில் இறக்கிவிட்டு, மறுநாள் நாங்கள் செல்ல வேண்டிய ஊர் சென்றடைந்தோம்.
மற்றொரு சமயம் ஆசிரமத்தில் சில காலம் சுவாமியின் அத்யந்த பக்தையுடன் ஒரு மத்திய வயது பெண்மணி தங்கியிருந்தார். இருவரும் கணவனை இழந்தவர்கள் என்பதால், அவர்களை சுவாமி தன்னுடைய நேரடிப் பாதுகாப்பில் வைத்திருந்தார்.
ஒரு நாள் அந்த மத்திய வயது பெண்ணின் மகள் நோயுற்றிருப்பதாக தொலைபேசியில் செய்தி வந்தது. அப்பெண்மணி தன் மகளைக் காண ஊர் செல்ல விரும்பினார்.
சுவாமியிடம் தகவல் சொல்ல, சுவாமி அவரிடம் யாருடன் ஊர் செல்லப் போகிறீர்கள் எனக் கேட்க, தனியாக பஸ்ஸில் செல்லப் போவதாக அப்பெண்மணி பதில் உரைத்தார்.
சுவாமி, தனித்து செல்லக் கூடாது எனக் கூறி, ஆசிரமத்தில் பணிபுரியும் தன் நம்பிக்கைக்குரிய ஒருவரை அழைத்து அப்பெண்மணியை அவர் ஊரில் பத்திரமாக பஸ்ஸில் கூட்டிச் சென்று விட்டு வருமாறு உத்திரவிட்டார்.
சுவாமியிடம் பக்தியும், நம்பிக்கையும் கொண்ட பெண்களின்பால் சுவாமி காட்டும் பரிவும், கருணையும்தான் அப்பெண்களின் குடும்பங்கள் ஷேமமாகவும், அமைதியாகவும், தெய்வீகமாகவும் இருக்க வைக்கின்றது என உறுதியாகச் சொல்லலாம்.
என் நாதன் யோகி ராம்சுரத்குமார் திருவடிகள் போற்றி.